அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது - சி.வி.சண்முகம் பேட்டி
குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும் எனவும், அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது எனவும் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீட்டு சட்டப்படி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயர் நீதிமன்றம் தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கூறியதாவது: அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல. அதற்கு அதிகாரமும் இல்லை. மனு கொடுத்துள்ள நபர் அதிமுகவிலேயே இல்லை. இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இருவரும் கையெழுத்திட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி இந்த வழக்கை தொடுத்துள்ளார். தேர்தல் ஆணையம் இதை விசாரிக்கலாமா? என்று முதலில் முடிவு செய்ய வேண்டும் என்றுதான் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும். அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.


