ஒமிக்ரான் பரவாமல் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்!!

 
corona

ஒமிக்ரான்  பரவாமல் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்னாப்பிரிக்காவில் ஒவ்வொரு நாளும் ஒமிக்ரான் பாதிப்பு இரட்டிப்பாகி கொண்டே செல்வதாகவும்,  தற்போது உலக அளவில் 29 நாடுகளைச் சேர்ந்த 373 நபர்கள் ஒமிக்ரான் என்ற உருமாறிய புதியவகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  இதற்கு முந்தைய கொரோனாவை விட 500 விழுக்காடு அதிகமாக பரவக் கூடியது என்றாலும்,  இதுவரை ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறி  மட்டுமே இருந்ததாகவும்,  இதுகுறித்து யாரும் பதற்றமடைந்து அச்சப்பட வேண்டாம் என்றும் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ops

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக வரும், பயணிகளை தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப தமிழ்நாடு அரசும் ஒமிக்ரான்  வைரஸ் பரவல் ஏற்படாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும்,  விமான நிலையங்களில் கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டு உள்ளதாகவும் , பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என முடிவு வந்தாலும் அவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

corona

ஒமிக்ரான்  பரவலால் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும் தன் பரவலை தடுக்க வேண்டுமானால்,  ஒரு மீட்டர் சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல் , காற்றோட்ட வசதி மேம்படுத்துதல் , ஜன்னல்களை திறந்து வைத்தல் , காற்றோட்ட வசதி இல்லாத அல்லது கூட்ட நெரிசல் இருக்கின்ற இடங்களை தவிர்த்தல், கைகளை கழுவுதல் ,தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் ஆகியவற்றை  தனிநபர்கள் பின்பற்றுவது தான் இந்த பரவலை தடுப்பதற்கான சிறந்த வழி என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

stalin

தடுப்பூசி செலுத்துவதை பொருத்தவரை முனைப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும்,  தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.  இது குறித்த விழிப்புணர்வையும் தமிழக அரசு எடுத்துரைக்க வேண்டும்.  வீட்டை விட்டு வெளியே வரும்போது தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை எடுத்து செல்ல வேண்டும் என்று தெலுங்கானா மாநிலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதை இருப்பதாக தகவல் வருகிறது.

எனவே தமிழக முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி வரும் முன் காப்பதே சிறந்தது என்பதற்கு ஏற்ப ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து இடங்களிலும் பின்பற்றுமாறு,  தகுந்த அறிவுரைகளை வழங்கி, அவை  பின்பற்றப்படுகின்றனவா?  என்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களை  கண்டறிந்து அவர்கள் அதைச் செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக வரும் வெளிநாட்டு பயணிகளை கண்காணிப்பதிலும்,  அண்டை மாநிலங்களின் எல்லைகளில் கண்காணிப்பை கடுமையாக்குவதிலும், எந்தவித சுணக்கமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.