அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும்- ஓபிஎஸ்
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும் என ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.
வைத்தியலிங்கம், மனோஷ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோருடன் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து பேரணியாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வருகை தந்து, ஜெயலலிதா நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதி மொழி எடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “இதற்கு முன்பு இரட்டை இலை தொடர்பான பல வழக்குகளில் தற்காலிகமாக தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக சிவில் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு இறுதியாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இறுதியாக இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும். அதிமுகவுக்கு வந்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றியவர் ஜெயலலிதா. மக்களவையில் 3-வது பெரிய கட்சியாக அதிமுகவை உயர்த்தியவர் அவர். அவரின் தியாகத்துக்கு உச்சபட்ச பதவி வழங்கப்பட்டது.
அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்துள்ளனர். இதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதனால் தான் அவர்கள் சந்தித்த தேர்தலில் எல்லாம் தோல்வியை சந்தித்துள்ளனர்” என்றார்.