ஜெயலலிதாவின் வேலைக்காரி சசிகலா, துரோகி டிடிவி தினகரன்- பொன்னையன்

 
சொந்த ரத்தத்தின் நிலைப்பாடே ஸ்டாலினை தோற்கடிக்கணும் என்பதுதான் – பொன்னையன்

ஜெயலலிதாவால் துரோகி என தூக்கியெறியப்பட்ட தினகரனுக்கு அதிமுக குறித்து பேச எந்த தகுதியும் இல்லை எனஅதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

சொந்த ரத்தத்தின் நிலைப்பாடே ஸ்டாலினை தோற்கடிக்கணும் என்பதுதான் – பொன்னையன்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன், “திமுகவில் கருணாநிதி ,ஸ்டாலின், உதயநிதி வருகையால் திமுக ஒரு கம்பெனியாக மாறிவிட்டது. துரைமுருகன் போன்ற சீனியர் அமைச்சர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். இதனால் உட்கட்சி பூசல் வெடித்து தீ தெரிய ஆரம்பித்து விட்டது, அது வெடித்து திமுகவே இல்லாத நிலை ஏற்படும், 2026 இல் மிகப்பெரிய கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக பதவியேற்பார். விஜய் பேசியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அது அவர்களின் உரிமை. விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு திமுக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எதிர்க்கிறார்கள் எங்களுக்கு எந்தவித பயமும் இல்லை.  


யார் அரசியலுக்கு வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. 2026-இல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். மேலும் சசிகலாவிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிய ஜெயலலிதா அவரை வேலைக்காரியாக வைத்திருந்தார். கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பும் தரவில்லையே. எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரத்தால் 2026-ல் அதிமுக அழிந்து விடும் என டிடிவி தினகரன் கூறுகிறார். ஜெயலலிதாவால் துரோகி என தூக்கியெறியப்பட்ட தினகரனுக்கு இதுபோல பேச எந்த தகுதியும் இல்லை. அண்ணா மாடல், புரட்சித்தலைவர் மாடல், அம்மா மாடல், எடப்பாடியார் மாடல், இதுதான் எங்கள் மாடல்” என்றார்.