அதிமுக அலுவலகம் வந்த பிரேமா ஜெயலட்சுமி விரட்டியடிப்பு

 
ட் ட்

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெயலலிதாவின் மகள் என தன்னை கூறிக் கொள்ளும் பிரேமா ஜெயலட்சுமி நேர்காணலுக்கு வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் அவரை காரை விட்டு இறங்கவிடாமல் தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தவர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேர்காணல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு விருப்பம் மனு வாங்கிய ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக் கொள்ளும் பிரேமா ஜெயலட்சுமி நேர்காணலில் பங்கேற்பதற்காக வருகை தந்ததார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் காரை விட்டு இறங்கவிடாமல் தடுத்து காரை எடுத்து செல்லுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் "நீ ஏன் இங்க வந்தா" என ஒருமையில் பேசி திட்டினர். உடனடியாக அதிமுக தலைமை அலுவகத்தின் கதவை ஊழியர்கள் மூடினர். இதனைத் தொடர்ந்து ஜெயலட்சுமி இறங்க முயன்றார். அப்போதும் அவரை தடுத்து முதலில் காரை எடுக்குறீயா இல்லையா என மிரட்டல் விடுத்த நிலையில் ஜெயலட்சுமி காரை எடுத்து சென்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமா என்கிற ஜெயலட்சுமி, விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறுவதாக எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அந்த அழைப்பை ஏற்று நான் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தேன் ஆனால் என்னை உள்ளே விடாமல் அடித்து விரட்டுகிறார்கள். என்னுடைய காரை கல்லால் அடித்தார்கள், நான் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகத்தான் இருக்கிறேன்.  விருப்பமனு வாங்க வரும் பொழுதும் கோகுல் இந்திரா வாங்க மாட்டேன் என கூறி ஓடிவிட்டார் இன்றைக்கு ஒரு பெண் என்றும் பாராமல் என்னை அடித்து விரட்டுகிறார்கள். இதற்கு நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லியே ஆக வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி ஆம்பளையாக இருந்திருந்தால் என்னை அழைத்து பேசி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு என்னை ஆட்களை தூண்டிவிட்டு அடித்து விரட்டுகிறார் என்றால் அவரை நான் சும்மா விட மாட்டேன் என்னிடம் பல ஆதாரங்கள் இருக்கிறது" என்றார்.