“தேர்தல் அறிவிப்புக்கு 10 நாட்களுக்கு முன்புகூட கூட்டணி மாறலாம்”- ராஜேந்திர பாலாஜி

 
ராஜேந்திர பாலாஜி ராஜேந்திர பாலாஜி

அதிமுக- பாஜக பலமான கூட்டணி. இந்த கூட்டணிக்குள் ஊடுருவி புகைச்சலை உருவாக்க திமுக முயல்கிறது. அதற்கு பத்திரிக்கையாளர்களும் துணையாக போக வேண்டாம் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி பேட்டி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது. திமுகவை எதிர்க்கின்ற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முடிவில் தான் எடப்பாடி பழனிச்சாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவரது கருத்துக்களும் செயல்களும் அதை நோக்கித்தான் இருக்கின்றன. திமுகவை எதிர்க்கின்ற கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கின்ற பணியை எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகிறார் அந்த பணி வெற்றியடையும். அதிமுக ஒன்றாகத்தான் இருக்கிறது. டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் குறித்த முடிவை எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார். இதே கருத்தைத்தான் செல்கின்ற இடமெல்லாம் கேட்கிறார்கள். இது தொடர்பான முடிவுகளை, தேர்தல் வியூகங்களை தேர்தல் கூட்டணி அமைப்பான முடிவுகளை யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் முடிவு செய்பவர் பலமிக்கவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அவர்தான் கூட்டணி கட்சியின் தலைவர். எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவை ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் ஏற்றுக் கொள்வோம்.

பாமகவில் பிளவு பட்டவர்களை இணைக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபடாது. அது அவர்களே பார்த்துக் கொள்வார்கள். பாமக பலம் பொருந்திய கட்சி‌. அவர்களுக்கு அனைத்து விஷயங்களும் தெரியும். பாமக ராமதாஸ் களம் கண்ட ஒரு போராளி. எதை விட்டுக் கொடுக்க வேண்டும், எதை சேர்க்க வேண்டும், எதை பிரிக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்பதும் அவருக்கு தெரியும். எது பந்தயக்குதிரை, எது ஜெயிக்க போகும் குதிரை என்பதும் அவருக்கு தெரியும். அதனால் அவரின் முடிவு சரியான முடிவாக தான் இருக்கும்‌‌. நேர்மையான முடிவாக தான் இருக்கும். இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை அவர்களுக்கெல்லாம் தெரிந்துள்ள காரணத்தினால் அவர்களின் முடிவு சரியானதாகத்தான் இருக்கும். தேர்தலுக்கு இன்னும் பத்து மாத காலம் இருப்பதால் பொறுமையாக இருக்க வேண்டும் தேர்தல் அறிவிப்புக்கு பத்து நாட்களுக்கு முன்பும் 10 நாட்களுக்கு பிறகும் கூட கூட்டணி மாறி இருக்கின்ற கதை எல்லாம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. டெல்லியிலும் நடந்துள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது” என்றார்.