திமுக கூட்டணியில் குழப்பம்! திமுக மீது மக்களுக்கு வெறுப்பு- ராஜேந்திர பாலாஜி
தமிழகத்தில் யாரும் சுபிட்சமாக சுகமாக வாழவில்லை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கலில் சிவகாசி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடந்த செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “மக்கள் பிரச்சனைகளை முடிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு போராட வேண்டும். வருகின்ற 2026- சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி கோட்டைக்கு போகிறார். ஸ்டாலின் வீட்டுக்கு போகிறார். அதற்காக நாம் பக்குவமாக செயல்பட வேண்டும். டீக்கடையில் உட்கார்ந்து இருப்பவர்களிடம் திமுக ஆட்சியில் மக்கள் கஷ்டப்படும் பிரச்சினைகள் பற்றி பேசுங்கள். மக்களை பாதிக்காத வகையில் ஆட்சி தந்தது அதிமுக. காலத்தை கடத்தும் ஆட்சி கொடுத்துக் கொண்டிருப்பது திமுக.
சென்னையில் நடந்த விமானப்படை சாகசநிகழ்ச்சியில் தண்ணீர் கூட கொடுக்காத கையாலாகாத திமுக ஆட்சியால் யாருக்கும் நன்மையோ, பலனோ கிடையாது. இந்த ஆட்சியில் சோறு பொங்க அரிசி இல்லை. குழம்பு வைக்க பருப்பு இல்லை. அடுப்பு எரிக்க மண்ணெண்ணெய் இல்லை. தமிழகம் முழுவதும் இருண்டு கிடக்கிறது. விலைவாசி ராக்கெட் வேகத்தில் கூடி, மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்குது. தமிழகத்தில் யாரும் சுபிட்சமாக சுகமாக வாழ வில்லை. நாம் அனைவரும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய சூளுரைத்து சபதம் ஏற்போம். திமுக கூட்டணியில் குழப்பம் நிலவி வருவதால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவே வெற்றி பெறும்” என்று பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி கொண்டிருந்தபோதே, நேரம் கடந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் அவரவர் தங்களது இருக்கையை விட்டு எழுந்து உணவு வழங்கும் பகுதிக்கு செல்ல தொடங்கினர். இதனைப் பார்த்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டன் சாப்பாடு வாசனை எனக்கே மணக்கிறது. அனைவரும் கொஞ்சம் பொறுங்கள் என்றார். அதனைத் தொடர்ந்து கூட்டம் முழுமையாக முடிவடையும் முன்பாகவே அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலானவர்கள்கூட்டம் நடந்த அரங்கை விட்டு, இரவு உணவு வழங்கும் பகுதிக்கு சென்றுவிட அனைவருக்கும் மணக்க -மணக்க கறி விருந்து வழங்கப்பட்டது.


