அரசிடம் பணம் இல்லாததால் பைக்கில் செல்பவர்களிடம் 500, 1000 பிடுங்குகிறார்கள்- சசிகலா

 
சசிகலா

தென்காசி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அம்மாவின் வழியில் மக்கள் பயணம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தென்காசியில் தொடங்கிய இந்த பயணம் இலஞ்சி, சுந்தரபாண்டியபுரம் வழியாக பாவூர்சத்திரம் வந்தடைந்தது. மாலை ஆறு மணிக்கு பாவூர்சத்திரம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு 8.45 மணிக்கு சசிகலா வந்து அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நேரமின்மை காரணமாக அங்கு கூடி நின்றவர்களிடம் எதுவும் பேசவில்லை. 

முன்னதாக தென்காசியில் உரையாற்றிய சசிகலா, “தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. அரசிடம் பணம் இல்லாததால் மக்களிடம் வரியை வசூலிக்கின்றனர். அரசிடம் பணம் இல்லாததால் பைக்கில் செல்பவர்களிடம் 500 ரூபாய், 1000 ரூபாய் கொடுனு சொல்லி தொந்தரவு செய்கிறார்கள். இதெல்லாம் ஜெயலலிதா இருந்தபோது நடக்கவில்லை. ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை. பல இடங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது. இந்த அரசிடம் திட்டமிடல் சரியாக இல்லை. குளம், குட்டைகளை தூர்வாரவில்லை. ஜெயலலிதா எந்த வெளிநாடும் போனது கிடையாது. ஆனால் இன்றைய முதல்வர் பல முறை வெளிநாடு செல்கிறார். நீங்க யார் கிட்ட வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.. ஆனால் என்கிட்ட முடியாது” என்றார்.