’அரைவேக்காடு அண்ணாமலை சூனாபானா போல் நடந்துகொள்கிறார்’ - செல்லூர் ராஜூ
வடிவேலுவின் சூனாபானா காமெடிபோல் பாஜக தலைவர் அண்ணாமலை நடந்து கொள்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “திராவிட கட்சிகளை புகழ்ந்து அண்ணாமலை அவராகவே மாட்டிக்கொண்டார். முதலமைச்சர் கைபேசியில் அழைத்ததுமே கலைஞர் நூற்றாண்டு நாணய விழாவில் கலந்து கொள்ள ஓடிச் சென்றுள்ளார். திராவிட ஆட்சியில் 70 ஆண்டுகள் பின்னோக்கி
(தமிழ்நாடு) சென்றுவிட்டது என்று சொன்ன அண்ணாமலை இன்று மாட்டிக் கொண்டார். சூனாபானா போல் அண்ணாமலை நடந்துகொள்கிறார். அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமான அரசியல்வாதி. அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி.
வேறு கட்சிகளே இருக்கக்கூடாது என திமுக நினைக்கிறது. தமிழக வெற்றி கழக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பது கண்டிக்கதக்கது. தமிழ்நாட்டில் பாஜக அமைக்கப்போவது மாமன் மச்சான் கூட்டணி என அண்ணாமலை கூறுகிறார். ஆனால் பாஜக மேலிடமே கூட்டணி பற்றி முடிவெடுக்கும். பா.ஜ.க.,விற்கு தி.மு.க.,வின் ஆதரவு தேவை.. தி.மு.க.,விற்கும் அதே நிலை தான்.. அதனால் தான் இந்த சரணாகதி” என்றார்.