“ஆட்சியில் பங்கு ஒத்து வராது என முதல்வர் காங்கிரசிடம் நேரடியாகவே சொல்லி இருக்கலாம்”- செல்லூர் ராஜூ
ஆட்சியில் பங்கு ஒத்து வராது என முதல்வர் காங்கிரசிடம் நேரடியாகவே சொல்லி இருக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சொக்கலிங்கம் நகர் 1 வது தெருவில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேவர் ப்ளாக் சாலையை அமைக்க பூமி பூஜை செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,"மதுரை மாநகராட்சியில் முல்லைபெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. சரியான புள்ளி விவரங்களை முதல்வருக்கு வழங்கவில்லை. 2.57 வீடுகளுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டதாக முதல்வரிடம் கொண்டு சென்றுள்ளார்கள். 2023 ஆம் ஆண்டு முடிக்க வேண்டிய பணியை காலதாமதாக தொடங்கி முழுமையாக செயல்படுத்தாமல் உள்ளார்கள். மாநகராட்சியில் ஒரு மேயரை நியமிக்க முடியவில்லை. துணை மேயரை வைத்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது நம்பிக்கை இல்லையா? மேயர் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். துக்ளக் தர்பார் ஆட்சி போல் திமுக ஆட்சி உள்ளது. ஒரு சர்வேயில் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் தலித் பெண்கள் பாதிக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இது திருமாவளவனுக்கு தெரியுமா? தெரியாதா?
திமுக அரசு தொடர்ந்தால் தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என மக்கள் நம்புகிறார்கள் என முதல்வர் கூறுகிறார். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என முதல்வர் தானே சொல்கிறார்கள்? மக்கள் சொல்கிறார்களா? தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா? என்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சிக்கிறார். இது குறித்து பிரேமலதாவிடம் கேளுங்கள். கேப்டன் விஜயகாந்த் கட்சியிடம் கேளுங்கள். ஆட்சியில் பங்கு ஒத்து வராது என முதல்வர் காங்கிரசிடம் நேரடியாகவே சொல்லி இருக்கலாம். அதை யார் கேட்கிறார், காங்கிரஸ் கட்சி தானே கேட்கிறது. அதை நேரடியாக முதல்வர் சொல்ல வேண்டியது தானே? கடந்த தேர்தலில் வழங்கிய அறிக்கையில் ஒரு சொட்டு கூட மது இருக்காது. இளம் விதவை அதிகமாய் உள்ளனர் என்று கூறினார் கனிமொழி. இப்போது இளம் விதவைகள் குறைந்து விட்டார்களா? அதை கனிமொழி கூற வேண்டும்.பாரதப் பிரதமர் திருப்பரங்குன்றம் செல்கிறார்களா என்று பாஜக அலுவலகம் தான் கூற வேண்டும்.எனக்கு உடம்பு ஃபுல்லா வியாதி என தாடி பாலாஜி கூறுவார். அனைத்து வியாதிகளுக்கும் ஒரே ஒரு மாத்திரை தீர்வு என்று விவேக் கூறுவார்.அதுபோல் ஆட்சி மாற்றம் ஒன்றுதான் தமிழ்நாட்டிற்கு முழுமையான தீர்வு. முதலமைச்சர் பயந்துவிட்டார், அவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.மோடி, அமித்ஷா அடிக்கடி வருகிறார்கள். கூட்டணி கட்சிகள் மக்களின் ஆதரவை பார்த்து முதலமைச்சர் புலம்புகிறார்... வடிவேலு திரைப்படத்தில் சுடுகாட்டில் புலம்புவது போல் ஐயோ என்னை தவிக்க விட்டார்களே என்று முதலமைச்சர் புலம்புகிறார்” என்றார்.

