ஆதவ் அர்ஜூனா ரகசிய சந்திப்பு... இன்று இரவு சென்னை செல்லும் செங்கோட்டையன்!
அதிமுகவில் ஒருங்கிணைப்பு கோரிக்கையை முன்வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய கே.ஏ.செங்கோட்டையன், சமீபத்தில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோரை சந்தித்ததால் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக, ஆதவ் அர்ஜூனா, சில தினங்கள் முன் செங்கோட்டையனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. வரும் 27.ம் தேதி நாளை மறுநாள் விஜய் முன்னிலையில் செங்கோட்டையனை கட்சியில் இணைக்க தவெக தயாராக இருப்பதாகவும், ஆனால் இறுதி முடிவு எடுக்க முடியாமல் செங்கோட்டையன் குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதனால், இரு தினங்களாக முக்கிய நபர்களை தவிர, வழக்கமாக தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி நபர்களின் சந்திப்பை அவர் தவிர்த்துள்ளார். கோபி அருகே குள்ளம்பாளையம் இல்லத்தில் உள்ள அவரை சந்திக்க வருபவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். தனது முக்கிய ஆதரவாளர்களிடம் செங்கோட்டையன் செல்போன் மூலம் ஆலோசித்து வருகிறார்.இதனையடுத்து, இன்று இரவு செங்கோட்டையன் சென்னை செல்கிறார். அவர் எடுக்கும் இறுதி முடிவின் அடிப்படையில் நாளை மறுநாள் தவெக.வில் இணைகிறாரா.? என்பது தெரிய வரும்.
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தவெக.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், கோபி அருகே குள்ளம்பாளையம் இல்லத்தில் ஆதரவாளர்கள் யாரையும் சந்திக்காமல் பிரதான வாயில் கதவு அடைக்கப்பட்ட நிலையில், இரு தினங்களாக அவர் தனிமையில் உள்ளார். சற்று நேரம் முன்பாக, அவரது நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் எம்.பி சத்தியபாமா, அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். வழக்கமாக வந்து செல்லும் அவரது ஆதரவாளர்கள் யாரும் இன்றி செங்கோட்டையன் இல்லம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனிடையே, கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு சென்னை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கே.ஏ.செங்கோட்டையனை சந்திக்க வந்த பலரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.. ஓரிரு ஆதரவாளர்கள் மட்டுமே வீட்டினுள் அனுமதிக்கப்படுகின்றனர். செங்கோட்டையனை சந்திக்க வருபவர்களை தோட்டத்து வீட்டின் பிரதான வாயிலில் காவலர் மூலம் நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.


