நாளை கோவை வரும் பிரதமருடன் சந்திப்பா?- செங்கோட்டையன் பதில்
நாளை கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு சஸ்பென்ஸ் எனக்கு கூறி செய்தியாளர்களிடமிருந்து நழுவிச் சென்றார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
வ உ சிதம்பரனார் 89 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்துவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். வ உ சிதம்பரனாரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் பேசிய அவர், “தேசிய தலைவர் வ உ சி நினைவு நாளில் மரியாதை செலுத்தியிருக்கிறேன். தனது சொத்துக்களை அனைத்தையும் விற்று பலரையும் இணைத்து வணிகத்தின் மூலமாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். சத்தியா கிரக போராட்டத்தின் மூலமாக சுதந்திரம் பெற வேண்டும் என போராடினார். இந்த நாளிலே அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்துவது எனது வாழ்வில் பெருமையாக கருதுகிறேன். புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் இந்த மணிமண்டபத்தை கட்டியிருக்கிறோம். பிறப்பு என்பது ஒரு மனிதனுக்கு நிகழ்வாக இருக்கலாம். ஆனால் இறப்பு என்பது ஒரு வரலாறாக இருக்க வேண்டும் என்பதற்கு சொந்தக்காரர் தான் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார்” என்றார்.
நாளை கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது சஸ்பென்ஸ் எனக் கூறி அங்கிருந்து நழுவி தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டு சென்றார்.


