"துரைமுருகன் உண்மையை மூடி மறைக்கிறார்" - ஆர்.பி.உதயகுமார் சாடல்!

 
udhayakumar

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உண்மையை மூடி மறைப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. கேரளா அதிகாரிகளே அணையைத் திறந்ததாகவும் அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணை அருகே முகாமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு விளக்கம் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது.  முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஊடகங்களில் வரும் செய்திகள் அரசியல் நோக்கிற்காக வெளியிடப்படுவதாக தெரிகிறது என்று தெரிவித்திருந்தார்.

udhayakumar

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியாக தண்ணீர் தேக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தீர்ப்பை பெற்று தந்தார். அணையின் நீர்மட்டம் 142 அடி நிரம்பும் முன்பே கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பெரியாறு அணையை திறந்து விட்டது தமிழகம் தான் என்று அமைச்சர் துரைமுருகன் கூறிவருகிறார்.

முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கேரள அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். கேரளா அரசு தன்னிச்சையாக தண்ணீர் திறந்ததால் 5 மாவட்ட விவசாயிகளின் உரிமை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுக கூட்டணியில் இருப்பதால் வாய் திறக்க அஞ்சுகிறார்கள் என்று தெரிவித்தார்.