"EIA தமிழ் மொழிபெயர்ப்பில் மீண்டும் இந்தி" - கொதித்தெழுந்த சு.வெங்கடேசன்!

 
சு வெங்கடேசன்

சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை கடந்தாண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. ஏப்ரல் மாதம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது. அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது. மற்ற பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையதல்ல எனக் கூறி சென்னை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.சு வெங்கடேசன்

அதேபோல வரைவு அறிக்கை பிரிவுகளை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதை தமிழில் வெளியிட்டால் தான், தமிழக மக்களால் ஆட்சேபங்களை தெரிவிக்க முடியும் என்பதால் தமிழில் வெளியிட வேண்டும் எனவும், அதன் மீது கருத்துக்களை தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வாறு பல்வேறு வழக்குகளுக்குப் பின் அனைத்து மொழிகளிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மொழிபெயர்க்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதனை அக்டோபர் 21ஆம் தேதிக்குள் வெளியிடுவோம் என்றும் கூறியது.

இச்சூழலில் சொன்னபடியே பல்வேறு பிராந்திய மொழிகளில் வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவ்வாறு வெளியிட்ட அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பில் அதே இந்தி மொழியிலேயே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை விமர்சித்து பதிவிட்டுள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன், "பல்வேறு உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு இணங்க வரைவு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020ஐ ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தமிழ் உட்பட 22 மொழிகளில் வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழ் இணைப்பில் இந்தி மொழி ஆவணமே இருக்கிறது. இந்தத் தவறை உடனடியாக சரி செய்ய வேண்டும். 22 மொழிகளில் வெளியான அறிவிக்கையை இந்த இணைப்பில் பார்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.