திமுக அரசை கண்டித்து ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு வருகிற 07ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!

 
admk office

சேலம் புறநகர் மாவட்டம், ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் அடிப்படை பணிகளை செய்யாமல் அதிமுக ஆட்சியின் திட்டங்களை கிடப்பில் போட்டுள்ள விடியா திமுக அரசைக் கண்டித்து சேலம் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகராட்சிக்கு அடுத்தபடியாக மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் ஆத்தூர் நகராட்சி பெரிய நகராட்சியாகும். அதனையொட்டி அமைந்துள்ளது நரசிங்கபுரம் நகராட்சி. இவ்விரு நகராட்சிகளிலும் நிலவி வந்த குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக எனது தலைமையிலான அம்மாவின் அரசு, சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்மாபேட்டை நீரேற்று நிலையம் முதல் மேட்டுப்பட்டி நீரேற்று நிலையம் வரை உள்ள பழுதடைந்த குழாய்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய குழாய்களை அமைத்து, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளைச் சேர்ந்த மக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கப்பட்டது. நகரின் அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு, தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டன. தேவையான தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகள் சுத்தமாக காட்சியளித்தன; சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டன; நகரின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன.


குறிப்பாக, வசிஷ்ட நதியை சுத்திகரிக்கும் பொருட்டு, சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளின் எல்லையில், ஆற்றில் கலக்கும் சாக்கடை கழிவுநீர் பகுதிகளை ஒருங்கிணைத்து, கழிவுநீர் கால்வாய் மூலம் சாக்கடை கழிவு நீரை ஆத்தூர் நகரின் எல்லைக்குக் கொண்டு சென்று மறுசுழற்சி செய்து, சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு வண்ணாந்துறை அமைத்து, சலவைத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், மிக அற்புதமான திட்டத்தைத் தயார் செய்து அதனை செயல்படுத்த அம்மாவின் நல்லாசியோடு செயல்பட்ட அரசால் நிதி ஒதுக்கப்பட்டது.
ஆத்தூர் நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஆத்தூர் நகரின் தெற்குப் பகுதியில் ராசிபுரம் செல்லும் சாலையையும், பெரம்பலூர் சாலையையும் இணைக்கும் வகையில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் உள்வட்டச் சாலை அமைத்திட 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டு, பூர்வாங்க பணிகளைத் தொடங்கிட எனது தலைமையிலான கழக அரசால் ஆணையிடப்பட்டது.இந்நிலையில், விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், படிப்படியாக நிலைமை மாறி எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்யாததால், மக்கள் குடிநீர் இன்றியும், மோசமான சாலைகளும், தெருவிளக்குகள் எரியாமலும், போதுமான தூய்மைப் பணியாளர்கள் இல்லாமல் தேங்கும் குப்பைகளாலும், ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ஆத்தூர் நகராட்சிக்கு ஆணையர் இல்லை; பொறியாளர் இல்லை; பணி மேற்பார்வையாளர் இல்லை; நகர அமைப்பு அலுவலர் இல்லை; பணி ஆய்வாளர் இல்லை; வருவாய் ஆய்வாளர் இல்லை. இதன் காரணமாக, அனைத்து முக்கிய பணியிடங்களும் நீண்ட நாட்களாக காலியாகவே உள்ளது. இத்தனைக்கும் சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருப்பவர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள். ஆனால், தமிழ் நாட்டிலேயே முக்கிய அதிகாரிகள் இல்லாமல் தடுமாறும் நகராட்சி ஆத்தூர் நகராட்சி. ஆத்தூர் நகர மக்கள் தங்கள் குறைகளை எங்கே சென்று சொல்லுவது என்பதுகூட புரியாமல் உள்ளனர். இதே போன்று, தமிழகத்தில் உள்ள மற்ற நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தரமற்ற பழுதான சாலைகள், பழுதடைந்த மின் விளக்குகள், குடிநீர் பற்றாக்குறை, போதுமான எண்ணிக்கையில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத நிலை ஆகியவற்றை இந்த விடியா திமுக அரசு விரைவில் நிவர்த்தி செய்யாதபட்சத்தில், அந்தந்த நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளின் அவல நிலைமைக்குக் காரணமான விடியா திமுக அரசையும், நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களையும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களையும் கண்டித்தும், நகராட்சிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சேலம் புறநகர் மாவட்டத்தின் சார்பில் 7.9.2023 - வியாழக் கிழமை காலை 10.30 மணியளவில், ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.