அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் - அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு

 
admk office

பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற, கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் வகையில் அதிமுக சார்பில் செப்டம்பர் 15, 16, 17 & 19 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் மேலான அறிவிப்பிற்கிணங்க, 15.9.2023, 16.9.2023, 17.9.2023 மற்றும் 19.9.2023 ஆகிய நான்கு நாட்கள், 'பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் பொதுக்கூட்டங்கள்' கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

ep

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், "நமது புரட்சித் தலைவி அம்மா" நாளிதழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.