கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

 
admk office

நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஆட்சி செய்து வருகிறார். 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதை அடுத்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அதிமுக சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக அன்பரசனை நிறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 10.5.2023 அன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், புலிகேசி நகர் (159) சட்டமன்றத் தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக D. அன்பரசன் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.