அதிமுக, திமுக டூ தவெக: விஜய்யின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த 'மாஜி'க்கள் - முழு விவரம்!
விஜய் தலைமையிலான தவெகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், அதிமுக, திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையன் (கோபி) , சத்யபாமா (ஈரோடு வடக்கு), நிர்மல்குமார் (திருப்பரங்குன்றம்) , கு.ப.கிருஷ்ணன் (லால்குடி), தூசி மோகன் (செய்யாறு) , விஎஸ் பாபு (கொளத்தூர்), ஜேசிடி பிரபாகர் (ஆயிரம் விளக்கு), ஸ்ரீதர் (வால்பாறை தனி) , ரெட்டியார்பட்டி நாராயணன் (நாங்குநேரி), திருப்பதி (திருப்பத்தூர்), கவிதா ராஜேந்திரன் (ஜெயங்கொண்டம்), சுப்ரமணியன் (கந்தர்வகோட்டை), கருப்பையா (சோழவந்தான்), முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் (ராசிபுரம்) உள்ளிட்டோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
திமுகவில் இருந்து வந்த நவல்பட்டு விஜி, திருவெறும்பூரிலும், விசிகவில் இருந்து வந்த ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கத்திலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த ஜெகதீச பாண்டியன் சங்கராபுரத்திலும் களமிறங்கியுள்ளனர்.
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து வந்த கே.எம். ஷரிப் புதுக்கோட்டையிலும், மனிதநேய ஜனநாயகக் கட்சியில் இருந்து வந்த ஹாரூண் ரஷீத் மயிலாடுதுறையிலும், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து வந்த முஸ்தபா மதுரை மத்தியிலும் போட்டியிடுகின்றனர்.
அமமுகவில் இருந்து வந்த கிங்ஸ்லி ஜெரால்டு வேதாரண்யம் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.நாங்குநேரி தொகுதியை அமமுகவுக்கு ஒதுக்கியதை எதிர்ப்பு தெரிவித்து, நாங்குநேரி முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுகவில் இருந்து அண்மையில் விலகி, தவெகவில் இணைந்தார். இவர் தற்போது தவெக சார்பில் நாங்குநேரியில் போட்டியிடுகிறார்.
டி.செல்வம், தவெக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை எதிர்த்து போட்டியிடுகிறார். அதேபோல, அதிமுகவில் இருந்து வந்த விஎஸ் பாபு, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களம் காண்கிறார்.அதிமுக சார்பில் போட்டியிடுவதாக இருந்த செய்யாறு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ தூசி மோகன், இரு தினங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்தார். அவருக்கு அதே தொகுதியில் போட்டியிட உடனடியாக தவெகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, திமுகவின் ஆர்.எஸ்.மோகனுக்கு, தவெக சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்து, முதல்வர் ஸ்டாலின் நடத்திய நேர்காணலிலும் பங்கேற்றார். ஆனால், அவருக்கு சீட் வழங்கப்படாத நிலையில், தவெகவுக்கு தாவினார்.
மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களை தவிர்த்து, அக்கட்சியின் தலைவர் விஜய் உள்பட மற்ற வேட்பாளர்கள் அனைவரும் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் உதவியாளரான ராஜேந்திரன் என்பவரின் மகன் சபரிநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் தொகுதியின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்காக முன்பே இறங்கி வேலை செய்து வந்த அஜிதாவுக்கு தவெக வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக விஜயின் நண்பரும், நடிகருமான ஸ்ரீதருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி தவெகவினர் அப்செட்...

