அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து - தலைமைக் கழகம் அறிவிப்பு..

 
admk office

சென்னையில் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக  அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.  

அதிமுக பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து, அவரது  தலைமையில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை அக்கட்சி எதிர்கொள்ள இருக்கிறது.  இந்த தேர்தல் அவரது ஆளுமை மற்றும் தலைமைப் பண்பை மதிப்பிடும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில்  தேர்தலை எதிர்கொள்ள அக்கட்சியினரை தயார்படுத்தும் விதமாக வரும் 7-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனையடுத்து  அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துகள், அதற்கு பழனிசாமி எதிர்வினையாற்றியது போன்றவற்றால் இரு கட்சிகள் இடையே பரபரப்பான சூழல் நிலவுகிறது.  

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து - தலைமைக் கழகம் அறிவிப்பு..

அதனால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, கட்சி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  அதன்படி வருகிற  7-ம் தேதி பகல் 12 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது  செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஒருசில காரணங்களால், 7.4.2023 - வெள்ளிக் கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த கழக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.