செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரியாக்ஷன்..!
அ.தி.மு.க. மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனும் அதிருப்தியில் இருந்து வந்தார். அவரது சொந்த மாவட்டமான ஈரோட்டில் கட்சிப் பதவியில் இருந்த கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை நியமித்தார். இதனால், கடும் அதிருப்திக்கு உள்ளான கே.ஏ.செங்கோட்டையன், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
இதனால், கட்சிப் பதவி பறிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் விதித்ததால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில்தான், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றிணைந்து, அங்கு வந்த டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.
அவர்கள் அனைவரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதற்கு செவிமடுக்கவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் இதே கருத்தை வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. இந்த நிலையில், தொடர்ந்து மவுனம் காத்து வந்த கே.ஏ.செங்கோட்டையன் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்தார். அதன்படி இன்று தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அதற்கு முன்னதாக நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் செங்கோட்டையன் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “செங்கோட்டையன் அதிமுக-வில் இல்லை. அதனால் பதில் சொல்ல அவசியம் இல்லை.. செங்கோட்டையன் குறித்து என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.. அவரை கேளுங்கள்..” என்று கூறிவிட்டு சென்றார்.


