“கொள்கையில் இருந்து தடம் புரண்டு பாஜக கையில் சிக்கியுள்ளது அதிமுக” - அன்வர் ராஜா..!!
அதிமுக தனது கொள்கையிலிருந்து தடம் புரண்டு பாஜக கையில் சிக்கியுள்ளது என திமுகவில் இணைந்த அன்வர் ராஜா பேட்டியளித்துள்ளார்.
அதிமுகவில் முன்னாள் அமைச்சராகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் , அமைப்புச் செயலாளராகவும் இருந்த அன்வர் ராஜா, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, “ தளபதி முன்னிலையில் திமுகவில் இணைத்துக்கொண்டேன். கருத்தியல் ரீதியாக அதிமுக தடம் புரண்டுவிட்டது. தனது கொள்கையில் இருந்து தடம்புரண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என ஒரு இடத்தில் கூட அமித்ஷா சொல்லவில்லை. அதிமுகவை சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே பாஜக கூட்டணி வைத்துள்ளது. 3 முறை கூட்டணி குறித்து பேட்டியளித்த அமித்ஷா, முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமி என ஏன் கூறவில்லை. எந்தக் கட்சியில் இணைந்தாலும் அக்கட்சியை சீரழிப்பது தான் பாஜகவின் வேலை. கூட்டணி ஆட்சி என அமித்ஷா பலமுறை கூறியும் முதல்வர் வேட்பாளர் நான் தான் என இபிஎஸ்-ஆல் கூற முடியவில்லை. நான் தான் போரை நிறுத்தினேன் என ட்ரம்ப் கூறுவதை போல் நான் முதலமைச்சர் வேட்பாளர் என 10 நாட்களாக கூறி வருகிறார்.
பல முறை என் ஆதங்கத்தை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. அதனால் என் அடுத்த சாய்ஸ் திமுகதான். அதனால் இணைந்தேன். பாஜக ஒரு நெகடிவ் சக்தி தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் பாஜகவை ஏற்க மாட்டார்கள். அதிமுக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும், 10 நாட்களில் ஆட்சியை கலைத்துவிட்டு பாஜகவை சேர்ந்தவர் முதலமைச்சர் ஆகிவிடுவார். 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் நோக்கமல்ல. அதிமுகவை அழிப்பதே பாஜகவின் நோக்கம். பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கூட்டணியால் ஏற்பட்ட அவமானத்தாலே அதிமுகவில் இருந்து வெளியேறினேன்” என்று தெரிவித்தார்.


