அதிமுக உட்கட்சி விவகாரம்- ஐகோர்ட்டில் அவசர அவசரமாக வழக்கு தொடர்ந்த எடப்பாடி பழனிசாமி

அதிமுக சின்னம், மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தி முடிப்பதற்கு உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது, கட்சி விதிகளில் திருத்தம் செய்தது தொடர்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரவீந்திரநாத், கே.சி.பழனிச்சாமி, புகழேந்தி உள்ளிட்டோர் அளித்த மனுக்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வு, தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, ஒரு அரசியல் கட்சியில் இருவேறு பிரிவுகள் இருந்தால், எந்த பிரிவு உண்மையான கட்சி என்பது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது., எனவே இது குறித்து விசாரிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் எடப்பாடி தாக்கல் செய்துள்ள வழக்கில், ஏற்கனவே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு உரிய காலக்கெடுவை தேர்தல் ஆணையத்திற்கு நிர்ணயிக்க வேண்டும் என்றும்,
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டிய சூழல் உள்ளது அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதாலும் காலக்கெடுவை நிர்ணயிக்க அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர வரவுள்ளது.