பாஜகவை கண்டிப்பாக திட்டுவோம் - அதிமுக ஐடி விங் செயலாளர் பரபரப்பு டுவீட்

 
admk bjp

பாஜகவை திட்டுவீர்களா இல்லையா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக திட்டுவோம் என அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  நாங்கள் தெய்வமாக வணங்கும் அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. பாஜகவால் இங்கு காலூன்றவே முடியாது. எங்களவை வைத்து தான் உங்களுக்கு அடையாளமே கிடைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் வரும்போது அதுபற்றி முடிவெடுத்துக்கொள்ளலாம். எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை. இதுதான் எங்கள் முடிவு. இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு என கூறினார். 

jayakumar

இதனையடுத்து இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி. அருண்குமார் பாஜகவுடன் கூட்டணீயும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது என கூறினார். அவரது பேச்சு கூட்டணியில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. இதனிடையே பாஜக கூட்டணி குறித்து பொது வெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. 


இந்த நிலையில், பாஜகவை திட்டுவீர்களா மாட்டீர்களா கரெக்டா சொல்லுங்க என சவுக்கு சங்கர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன், கண்டிப்பாக திட்டுவோம் sir, நாங்கள் தெய்வம் என நினைக்கும் எங்கள் தலைவர்களை அவர்கள் சிறுமைப்படுத்த சிறுபிள்ளைத்தனமாக பேசும்போது, இவர்களோடு கொஞ்சி கூட்டணியா பேச முடியும் என குறிப்பிட்டுள்ளார்.