பள்ளி மாணவியை நடுரோட்டில் தாக்கிய அதிமுக பிரமுகர்.. போலீஸ் வலைவீச்சு..
சென்னையில் நடுரோட்டில் பள்ளி மாணவியை கன்னத்தில் அறைந்து, கத்தியைக் காட்டி மிரட்டிய அதிமுகவைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமி அருகே சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியை இளைஞர் ஒருவரும் அவரது கூட்டாளியும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியதோடு, கன்னத்தில் அறைந்து காதலிக்கச் சொல்லி மிரட்டியுள்ளனர். அத்துடன் நடுரோட்டில் மாணவியை தலைமுடியை பிடித்து இழுத்து அட்டூழியம் செய்துள்ளார். தன்னை காதலிக்கவில்லை என்றால் குடும்பத்தையே காலி செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனைப்பார்த்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் இளைஞரையும் அவருடன் அந்த மற்றொரு நபரையும் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ராயப்பேட்டையைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது கூட்டாளி என தெரியவந்தது. இதில் சூர்யா அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை 118வது வட்டச் செயலாளர் என்பது தெரியவந்தது. அவர் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சூர்யாவை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காரில் மது பாட்டில்கள் விற்பனை செய்த வழக்கில் ஐஸ் ஹவுஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சூர்யா சிறையில் இருந்துள்ளார். சிறையில் இருந்து வெளிவந்த பின் தொடர்ந்து மது பாட்டில்கள் விற்பனை மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது மாமாவும் ரவுடியுமான அதிமுக வட்ட துணைச் செயலாளர் கானா ஆறுமுகத்தின் பெயரைச் சொல்லி அந்த பகுதியில் உள்ள கடைகளில் மாமூல் வசூல், உணவகங்களில் இலவச பிரியாணி கேட்டு மிரட்டல் விடுப்பது என தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.


