அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி : அதிமுக பிரசாத்துக்கு உடந்தையாக இருந்த எஸ்.ஐ கைது..

 
arrest arrest

 அதிமுக ஐடி-விங் நிர்வாகி பிரசாத்துக்கு உடந்தையாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 22ஆம் தேதி தனியார் மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி வின் நிர்வாகி மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், மற்றொரு அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.  அதன் பிறகு அதிமுக ஐ.டி.விங் நிர்வாகியான பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தார் என அடுத்தடுத்த புகார்கள் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக அதிமுக நிர்வாகி பிரசாத், அஜய் வாண்டையார் உட்பட நான்கு பேரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  பிரசாத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், மற்றும் அவரது செல்போனை கைப்பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் என்பவர் உடந்தையாக இருந்தது தெரிய வந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அதன்படி நேற்று இரவு மதுரையில் வைத்து ஆயுதப்படை காவலர் செந்தில்குமாரை நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசனிடம் தனி பாதுகாவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது. 

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி : அதிமுக பிரசாத்துக்கு உடந்தையாக இருந்த எஸ்.ஐ கைது..

கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட காவலர் செந்தில்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த பிரசாத்திற்கு, இடைத்தரகராக செயல்பட்டு புகார் தாரர்களிடமிருந்து வேலைக்காக பணம் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

அதேபோன்று கோவையில் தீவிரவாத தடுப்பு பிரிவில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் மணித்துரையும் பிரசாத்திற்கு உடந்தையாக செயல்பட்டு வந்துள்ளார்.  பிரசாத்தின் செல்போனை ஆய்வு செய்ததில் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் மணித்துரையையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார் விசாரணைக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.  உதவி ஆய்வாளர் மணித்துரை அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் மற்றும் பிரசாத் கேட்கும் நபர்களின் செல்போன் எண்களை வைத்து அவர்களது , கால் டீடயல்ஸ், டவர் லொகேஷனை சட்டவிரோதமாக எடுத்து கொடுத்திருக்கிறார் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், காவலில் எடுக்கப்பட்டுள்ள அதிமுக பிரமுகர்கள் பிரசாத் அஜய் வண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோரிடமும், தீவிரவாத தடுப்பு பிரிவின் உதவி ஆய்வாளர், காவலர் செந்தில்குமாரிடமும் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர் ஜெயசந்திரன் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதிமுக நிர்வாகி பிரசாத்திற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் மற்றொரு காவல் உதவி ஆய்வாளரையும் பிடித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்து இந்த மோசடிக்கு காவல்துறையை சேர்ந்த பலர் உதவி செய்திருப்பது உயர் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.