மூக்கையாத் தேவரின் 44வது நினைவு தினம் - அதிமுக சார்பில் மரியாதை

 
Mukkaya devar Mukkaya devar

மூக்கையாத் தேவர் அவர்களின் 44-ஆவது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் வருகிற 6.9.2023ம் தேதி வீர அஞ்சலி செலுத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அரசியலிலும், பொதுச் சேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றியவரும், கல்விப் பணிகளில் அதிக நாட்டம் கொண்டவருமான, போற்றுதலுக்குரிய திரு. பி.கே. மூக்கையாத் தேவர் அவர்களின் 44-ஆவது நினைவு நாளான 6.9.2023 - புதன் கிழமை காலை 10.30 மணியளவில், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் திரு. மூக்கையாத் தேவர் அவர்களுடைய நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்படும். 


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. R.B. உதயகுமார், M.L.A., அவர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திரு. மூக்கையாத் தேவர் அவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.