முகூர்த்த நாட்களையொட்டி விமான கட்டணம் கிடுகிடு உயர்வு..

 
flight flight


ஜூலை 11, 12ம் தேதிகளில் விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

ஜூலை 11ம் தேதி வரும் வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களான சனி(ஜூலை 12)  , ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 13)  விமானம் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.  வரும் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் ஆனி மாத முகூர்த்த நாட்கள் என்பதால் விமான கட்டணம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  குறிப்பாக  ஜூலை 11( வெள்ளிக்கிழமை) என்று சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமான கட்டணம் 4 மடங்கு அதிகரித்துள்ளது.  அதாவது வழக்கமாக  சென்னை - மதுரை செல்லும் விமான கட்டணம் ரூ.4000 ஆக இருக்கும். இந்நிலையில் தற்போது ரூ.13,000 வரை உயர்ந்து  ரூ.16,000 ஆக அதிகரித்துள்ளது.  

chennai airport

பண்டிகைக் காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். விமான கட்டண உயர்வு குறித்து பல புகார்கள் எழுந்தபோதும் மத்திய அரசு கட்டண உயர்வை தடுக்க தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே வார இறுதி  நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ரயில்களில் பயணிகள்  கூட்டம் நிரம்பி வழிகின்றன.  சென்னையில் இருந்து மதுரை, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.  காத்திருப்போர் பட்டியலும் நிரம்பியதால் பெரும்பாலான ரயில்களில் ஜூலை 13, 14ம் தேதிகளுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டுவிட்டன.  

இதில் விமான கட்டணங்களும் கடுமையாக உயர்ந்திருப்பதால் , பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் எனவும், சென்னையிலுருந்து மதுரை, கோவை போன்ற நகரங்களில் இரவு நேரத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றும்  கோரிக்கை எழுந்துள்ளது.