திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதி..!!
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் தம்பிக்கு நவீன் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித்குமார்(27) , போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார். கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்து போலீஸார், அஜித்தை தாக்கும் வீடியோ காண்போரை கலங்கச் செய்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டதை தொடர்ந்து, 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிவகங்கை எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து மானாமதுரை டி.எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் தம்பி , நவீன்குமாருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டது. அரசுப்பணிக்கான ஆணையை அமைச்சர் பெரியகருப்பன், நவீன்குமாரிடம் வழங்கினார். மேலும் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அஜித்குமாரின் தம்பிக்கு நவீன் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே விசாரணையின்போது அஜித்குமாரை போலவே தன்னையும் போலீஸார் தாக்கியதாக நவீன்குமார் தெரிவித்திருந்தார். இந்தச்சூழலில் அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸார் தாக்கியதால் ஏற்பட்ட உள்காயங்களால் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


