ஐரோப்பியன் GT4 சேம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித் திட்டம்

 
அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரது நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. இதனை எச் வினோத் இயக்கியிருந்தார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் மற்றும் பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர். அதுமட்டுமின்றி துப்பாக்கி சுடுதல், ட்ரோன் தயாரிப்பிலும் ஆர்வம் உடையவர். ஆரம்ப காலத்தில் கார் பந்தயத்தில் கலந்து கொண்டார். அதன்பிறகு மீண்டும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார். 

2025ம் ஆண்டு நடைபெற உள்ள European GT4 Championship மோட்டார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் திட்டமிட்டுள்ளார். இதற்காக இங்கிலாந்து, ஐரோப்பா & மத்திய கிழக்கு நாட்டு அணிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ஜான் கொக்கேன், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். 

நடிகர் அஜித் தற்போது அடிக்கடி துபாயில் கார் ஓட்டும் வீடியோ வெளியாகும். மேலும் தற்போது லேட்டஸ்ட் மாடல் விலையுயர்ந்த கார்களை வாங்கியுள்ளார். துபாயில் அடிக்கடி கார் பந்தய பயிற்சி எடுத்து வருகிறார். கார் பந்தயத்தில் பங்கேற்க தான் அஜித் கார் ஓட்டி பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மீண்டும் அஜித் கார் பந்தயத்திற்கு திரும்பியுள்ளது அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.