‘சரக்கு சரியில்ல’... 4 வருடங்கள் முன் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை விற்றதாக மதுப்பிரியர் வாக்குவாதம்
நான்கு வருடங்கள் பழைய மதுபானத்தை விற்பனை செய்ததாக டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் மதுப்பிரியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வைரலாகிவருகிறது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடை (கடை எண் 4014) செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்று மதியம் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 180 ரூபாய் கொடுத்து OAK VAT எனும் ரம் வகையான மதுபானத்தை வாங்கியுள்ளார். அந்நபர் மதுபானத்தை வாங்கி பாதி குடித்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மது பிரியர் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு வந்து அங்குள்ள ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கடந்த 2021 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மதுபானத்தை தனக்கு வழங்கியதாகவும், இதனை குடித்தவுடன் மயக்கம் ஏற்படுவது போல் உள்ளதாக கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"சரக்கு சரியில்லைன்னு சொன்னேன் தானே.. ரெண்டு ரவுண்ட் வேற குடிச்சிட்டேனே" 4 வருடங்கள் முன் தயாரிக்கப்பட்ட பழைய மதுபானத்தை விற்பனை செய்ததாக டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்#Chengalpattu | #Liquor | #ExpiredLiquor | #Tasmac | #PolimerNews pic.twitter.com/gRtx5d0Ymh
— Polimer News (@polimernews) August 2, 2024
இதுகுறித்து டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, குடோனில் இருந்து அனுப்பப்படும் மதுபான பாட்டில்களையே விற்பனை செய்து வருவதாகவும், ரம், பிராந்தி, ஓட்கா உள்ளிட்ட மதுபான வகைகளுக்கு காலாவதி தேதி இல்லை எனவும், பீர் பாட்டில்களுக்கு மட்டுமே காலாவதி தேதி உள்ளதாக தெரிவித்தனர். இந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.