மழையால் பாதிப்பு - தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்திடுக!!

 
sasi

திமுக தலைமையிலான அரசு வாக்களித்த மக்களின் நலனைக் கொஞ்சமாவது நினைத்து பார்த்து, தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு  நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

sasikala

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இன்னும் பெருமழையே வரவில்லை, தற்போது ஒரு சில இடங்களில் மட்டும் கனமழை பெய்து வருகிறது. அநேக இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை தான் பெய்து வருகிறது. இந்த மழைக்கே தமிழகம் தத்தளித்து கொண்டு இருக்கிறது. தமிழக மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். திமுக தலைமையிலான அரசோ என்ன செய்து கொண்டு இருக்கிறது என்றே தெரியவில்லை. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்ற தவறிய திமுக தலைமையிலான அரசிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்த அன்றே தமிழக அரசு மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 3ஆம் தேதி அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால், தமிழக முதல்வரோ மறுநாளே X வலைத்தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதாவது, சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தூர்வாருதல், புதிதாக 876 கி.மீக்கு மழைநீர் வடிகால் அமைத்து விட்டோம், இதன் காரணமாக மக்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும், அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள் களத்தில் மக்களுக்காக துணை நிற்பார்கள் என்றும், மக்களுக்கு சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுப்போம் என்றும் தமிழக முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். ஆனால் இன்று உண்மை நிலை என்னவென்றால், தண்டையார் பேட்டையில் வ.உ.சி.நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவிலிருந்து பெய்து வரும் மழையின் காரணமாக 30துக்கும் மேற்பட்ட வீடுகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த பகுதியை அமைச்சரோ, அரசு அதிகாரிகளோ, வார்டு கவுன்சிலரோ யாருமே வந்து பார்க்கவில்லை என்றும், எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இங்குள்ள மக்கள் சொல்லி மிகவும் வேதனைப்படுகின்றனர். மேலும், கடந்த இரண்டு நாட்களாக சாப்பிடுவதற்கு தேவையான உணவு தயாரிப்பதற்கும் வழியின்றி பட்டினியாக இருப்பதாக சொல்லி மிகவும் கவலைப்படுகின்றனர். 

sasikala

அதேபோன்று சென்னை மூலக்கொத்தளம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் அவ்வழியாக சென்ற அரசு பேருந்து தண்ணீரில் மூழ்கி பேருந்தில் பயணித்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வெளியேறியுள்ளனர். வடசென்னை பகுதிகளில் சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். மேலும், ஆர் கே நகர் காமராஜர் சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மழைநீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகிவிட்டனர். அதேபோன்று ஆர் கே நகர் இளைய முதலி தெரு சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. நுங்கம்பாக்கத்தில் மரம் முறிந்து விழுந்து ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது மரம் முறிந்து விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். மாநகராட்சியில் சேதமாக உள்ள மரங்களை கண்டறிந்து முறையாக அகற்றவில்லை. சென்னை மாநகராட்சி தற்போது செயல்படுகிறதா என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர். 

திருப்பூர் மாநகராட்சி 8 -வது வார்டு மும்மூர்த்தி நகர் கிழக்கு,13 வது வார்டு காந்திநகர்,முருகம்பாளையம், ஆண்டிபாளையம் பகுதிகளில் நள்ளிரவில் பெய்த கன மழையால் 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைவதாக சொல்லி` வேதனைப் படுகின்றனர்.  அதேபோன்று, ஈரோட்டில் பெய்த கன மழையின் காரணமாக பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு `ஏற்பட்டு அங்குள்ள மல்லிகை நகர் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கி கிறது. திருவாரூர் மாவட்டத்தில் காலை முதல் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், முத்துப்பேட்டை, கொரடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாகவும், மேலும் கனமழையாக தொடர்ந்தால் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

sasikala

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை முதல் வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல், பூவைத்தேடி, கருவேலங்கடை, புத்தூர், தெத்தி,பாலையூர் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கி சேதமாகி இருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது விவசாயிகள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக தலைமையிலான அரசு பொய்யான வாக்குறுதிகள் அளிப்பதை விட்டுவிட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழக மக்களை பாதுகாக்க மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைளைப் போன்று, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து தரவேண்டும். மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள வெள்ளநீரை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும். மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு தங்குமிடம் குடிநீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை தடையின்றி கிடைக்க ஆவனசெய்யவேண்டும். மேலும், மின்சார துறையை சேர்ந்தவர்கள் விழிப்புடன் செயல்பட்டு பொதுமக்களுக்கு மின் விநியோகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அதேபோன்று மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையை சேர்ந்த ஊழியர்கள் சாலைகளில் மழைநீர் தேங்காமல், போக்குவரத்து தடையின்றி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். நீர்நிலைகள், கால்வாய்களை தொடர்ந்து பராமரித்து மழைநீர் வெளியேறும் வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும். வாக்களித்த மக்களின் நலனைக் கொஞ்சமாவது நினைத்து பார்த்து மழைக்காலத்தில் தமிழக மக்களை பாதுகாத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன். " என்று குறிப்பிட்டுள்ளார்.