நீட் விலக்கு விவகாரம் : சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடத்த முடிவு... அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்...

 
நீட் விலக்கு - தமிழக அரசு

நீட் விலக்கு  விவகாரத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, மீண்டும்  மசோதா நிறைவேற்றி  ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற  அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பதற்காக,  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.  ஆனால் சுமார் 4 மாத காலமாக இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர், மசோதாவை கிடப்பில் போட்டிருந்தார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: போலீசில் புகார் அளித்த மருத்துவக் கல்லூரி!

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.  நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக இருப்பதாகவும், சமூக நீதிக்கு எதிராக இருப்பதாகவும்  ஆளுநர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்திருந்தது.  இந்தனியடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இந்தக் கூட்டத்தை பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் புறக்கணித்துள்ளன.

நீட் விலக்கு

இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  2007ல் நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற தமிழக சட்ட முன் வடிவுக்கு 84 நாட்களுக்குள் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதாக குறிப்பிட்டார்.   ஆனால், தற்போதைய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் 142 நாட்கள் கிடப்பில் போட்டு அரசியலமைப்பு கடமையை மீறியுள்ளார்  என்றும் குடியரசுத் தலைவருக்கே மசோதாவை அனுப்பாமல்  தன் கடமையை மீறியிருக்கிறார் என்று தெரிவித்தார்.

ஸ்டாலின்

இந்நிலையில்  நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிரைவேற்றப்பட்டுள்ளது.   மீண்டும்  தமிழகத்திற்கு நீட் விலக்குகோரி தீர்மானம் நிறைவேற்றி, அந்த  சட்ட முன் வடிவை முதல்வர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆளுநரிடம் நேரடியாக சென்று அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

சட்ட மசோதாவை மீண்டும் அனுப்பும்போது, அதில் கூடுதல் அம்சங்களை சேர்க்கலாமா என்பது குறித்து சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில்  முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.   மீண்டும் நீட் விலக்கு சட்ட மசோதாவை நிறைவேற்ற வழி செய்யும் வகையில்  வரும் 9ஆம் தேதி புதன்கிழமை சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூட்டப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.