புதுச்சேரியில் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் திட்டம் ரத்து
புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலில் இருப்பதால், 8ம் வகுப்பு வரை ஆல்-பாஸ் திட்டம் ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு 5, 8ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்துள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்தாகியுள்ளது. புதுச்சேரியில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை அமலில் இருந்தது.
தற்போது புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்முறையாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பொது தேர்வுகளையும் புதுச்சேரி மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் கட்டாய தேர்ச்சி ரத்து அமலாகியுள்ளது. இவ்விஷயத்தில் அந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம், “தேர்ச்சி முறை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரி மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் உத்தரவை புதுச்சேரி அரசு ஏற்று செயல்படும். அதாவது புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலில் இருப்பதால், 8ம் வகுப்பு வரை ஆல்-பாஸ் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரம் உயரும். அதன் அடிப்படையில் தான் மத்திய அரசு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். தனியார் பள்ளிகள் நிச்சயமாக கல்வி துறை உத்தரவை பின்பற்ற வேண்டும்” என்றார்.


