ஆல் செட்..! சினிமாவையே மிஞ்சிடும் போலிருக்கே.. தவெக மாநாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன??
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் இன்றே விழுப்புரம் மாவட்டத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். அதற்கேற்ப மாநாட்டுத் திடலில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
-> 85 ஏக்கர் பரப்பளவிலான மாநாட்டுத் திடலில், பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
-> மாநாட்டுத் திடலில் புல் தரைகளில் கிரீன் மேட் போடப்பட்டு , பொதுமக்கள் அமர 50,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
- > கூட்ட நெரிசலை தவிர்க்க தனித்தனி பார்டிஷியன்களாக பிரிக்கப்பட்டு 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
-> லட்சக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் மாநாட்டுத் திடலுக்கு வெளியே நின்று நிகழ்ச்சியைக் காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-> மாநாட்டுத் திடலில் உள்ள ஒவ்வொரு அரங்கிலும் 2 குடிநீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளன. திடலைச்சுற்றி 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு ஆங்காங்கே குடிநீர் டேங்க்குகள் என மொத்தம் 300 குடிநீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளன.

->மாநாட்டுத் திடலில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், விஜய் ஆகியோரது பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
-> மாநாட்டுத் திடலைச் சுற்றி மொபைல் டாய்லெட் எனப்படும் 600 நடமாடும் கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளன.
-> அவசர தேவைகளுக்காக 18 மருத்துவ முகாம்களும் , அவற்றில் 150 மருத்துவர்கள் 150 மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
-> தேவைப்படும் பட்சத்தில் மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல 20 ஆம்புலன்ஸ்களும் மாநாட்டுத் திடல் அருகே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
-> கடும் வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் குளுக்கோஸ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-> வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மாநாட்டுக்கு வருபவர்கள் தொப்பி அணிந்து வரவும், குடை எடுத்து வரவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
-> மாநாட்டுத் திடலை ஒட்டி உள்ள சாலைகளில் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டு அரங்குகளில் மட்டும் சுமார் 20,000 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

-> வாகனங்களை நிறுத்த 200 ஏக்கர் பரப்பளவில் நான்கு பார்க்கிங் மைதானங்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-> மாநாட்டு அரங்கம், திடல், பார்க்கிங் என அனைத்து இடங்களிலும் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட உள்ளன.
-> கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் தனிக்குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
-> ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் கூட உள்ளதால் தகவல் தொடர்பு எளிதாக இருக்க பிரத்யேகமாக ஒரு மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளது.
-> மாநாட்டு நிகழ்ச்சிகளை பொதுமக்கள் எளிதாக கண்டுகளிக்க 72 எல்.இ.டி திரைகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.
-> காவல்துறையினரின் வழக்கமான பாதுகாப்போடு தனியார் தன்னார்வலர்கள் 15,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
-> மாநாட்டுத் திடலுக்கு உள்ளே உணவுகள் வினியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உணவு அருந்திவிட்டு வரவேண்டும் என்றும், அல்லது உணவு பார்சல் கொண்டு வந்துவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-> மாநாட்டுக்கு வரும் முக்கிய பிரபலங்கள் பயன்படுத்த 5க்கும் மேற்பட்ட கேரவன்கள் மாநாட்டுத் திடல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


