தவெக-வுடன் கூட்டணியா?? பிரேமலதா சொன்ன நச் பதில்..
தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பான கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ‘நச்’ பதில் அளித்துள்ளார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்டத்திற்கு வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்குள்ள தனியார் ஹோட்டலில் இன்று செய்தியாளர்களை காலை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறையவில்லை எனவும், ஆரம்பத்தில் 234 தொகுதிகளிலும், 40 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட்டபோது கிடைத்த வாக்கு சதவீதத்தை, தற்போது 4 தொகுதிகளில் போட்டியிடும் போது கிடைக்கும் வாக்கு சதவீதத்துடன் ஒப்பிடக் கூடாது. தேமுதிக தொண்டர்கள் மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சியினருக்கு வாக்களித்து வருகிறார்களே அதையும் கணக்கில் கொள்ள வேண்டுமே.
2026 இல் ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டதுதான். ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட, தனது வாக்குறுதிதான் முக்கியம் என்று எடப்பாடி பழனிச்சாமி எங்களிடம் தெரிவித்துள்ளார். அவரது வார்த்தைக்கு மரியாதை கொடுத்து அமைதியாக இருக்கிறோம்.” என்றார்.

தொடர்ந்து விஜய் கட்சியுடன் கூட்டணியா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “கூட்டணியா என்பது குறித்து நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். அதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில் நாங்கள் கட்சி தொடங்கி 20 வருடங்கள் ஆகிவிட்டது.
2026 சட்டமன்ற தேர்தலில் தனியாக நிற்பது காலம் தான் முடிவு செய்யும். 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதற்காக சென்னையில் நான்கு நாட்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 2026 இல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான். அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக இருந்து அதனை சுட்டிக் காட்ட முடியும். திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரீகம். ”என்று தெரிவித்தார்.


