தவெகவில் இணைய போகிறேனா? யாருடன் கூட்டணி?- டிடிவி தினகரன் விளக்கம்

 
ttv dhinakaran ttv dhinakaran

செங்கோட்டையன் த.வெ.க ,வில் இணைந்தார் என்பதற்காக நாங்களும் சேருவோம் என்பதே தவறு. அமுமுகவை தவிர்த்து விட்டு யாரும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என அமமுக பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அமமுக வின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. இதில் பங்கேற்க வந்திருந்த அக்கட்சியின் பொது செயலாளர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார் என்பதற்காக நாங்களும் அதில் இணைவோமா என்ற கேள்வியே தவறு...நாங்கள் எதற்கு இணைய வேண்டும்? அண்ணாமலையை சந்தித்தது நட்பு ரீதியிலானது. இதில் அரசியல் இல்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு சிலரின் சுயநலமே காரணம். தனக்கு கட்சி பதவி போதும், திமுகவே ஆண்டு விட்டு போகட்டும் என்றும் தனக்கு இரண்டு கண்களும் போனாலும் பராவாயில்லை, தனது எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என யார் இருக்கிறார்கள் என அனைவருக்கும் தெரியும்.

கூட்டணியில் சேர அமமுக எந்த நிபந்தனையும் விதிக்காது, மரியாதை அளிக்கும் இடத்தில் அமமுக இடம் பெறும். அமமுக இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று அதில் நாங்கள் கூட்டணி அமைச்சரவையிலும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறுவது எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலவீனத்தை வைத்தும் கூட்டணியில் தவறு செய்வார்கள் என்ற நம்பிக்கையிலும்தான் அவர்கள் அறை கூவல் விடுகிறார்கள். அமலாக்கத்துறை ஊழல் நடைபெற்றுள்ளது என அறிக்கை அளித்துள்ளது. தமிழக அரசு இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாளை முதல் வரும் பதினைந்தாம் தேதி வரை அமமுக சார்பில் தமிழகத்தில் 234 தொகுதி மற்றும் புதுச்சேரியிலும் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் பெறவுள்ளோம்” என்றார்.