"நான் முதலமைச்சராக வந்துவிடுவேன் என எடப்பாடி பழனிசாமி பயந்தார்" - டிடிவி தினகரன்
மற்றவர்களை முதலமைச்சராக்கக் கூடிய இடத்தில் நான் இருந்தேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிசாமியை எம்.எல்.ஏக்கள் பலர் முதலமைச்சராக்க ஒப்புக்கொள்ளாமல் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை பாதுகாத்துதான் பழனிசாமியை முதலமைச்சராக்கினோம். மற்றவர்களை முதலமைச்சராக்கக் கூடிய இடத்தில் நான் இருந்தேன். என்னைப் பார்க்கவே தயங்குவார் பழனிசாமி. நான் முதலமைச்சராக வந்துவிடுவேன் என எடப்பாடி பழனிசாமி பயந்தார். டிசம்பர் மாதம் மகிழ்ச்சியான செய்தி வரும். எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை ஏற்க மாட்டோம். நான் பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டேன் என்று எங்கேயும் சொல்லவில்லை. நயினார் நாகேந்திரன் தவறாக சொல்கிறார். அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக செல்ல முடியாது.
அண்ணாமலை எனக்கு நல்ல நண்பர், உண்மையை பேசக்கூடியவர். அண்ணாமலையும் நானும் 9 ஆம் தேதி டெல்லிக்கு செல்வதாக இருந்தது. கூட்டணியிலிருந்து விலகிய முடிவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என அண்ணாமலை தொடர்ச்சியாகவே என்னிடம் வலியுறு்த்தினார். அவர் என்னிடம் அரசியல்வாதியாகவே பழகியதில்லை. நானும் அப்படிதான். என்னை கட்சியில் இருந்து ஜெ., நீக்கியது உலகத்திற்கே தெரியும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் முகம் வாடிபோய் உள்ளது. ஓபிஎஸ்க்கு அடுத்த இடத்தில் ஈபிஎஸ் இருந்ததால் அவரை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்தோம்.என்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவித்ததால் ஈபிஎஸ்க்கு பயம் வந்தது.” என்றார்.


