"2026 தேர்தலில் ஈபிஎஸ்ஸின் துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும்" - டிடிவி தினகரன்
திருமங்கலத்தில் உள்ள அமமுக நிர்வாகியின் இல்ல விழாவிற்கு கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய டிடிவி தினகரன், “யாருடன் கூட்டணி என்பது வருகிற 31ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்பது என்ன சட்டமா ? பல்வேறு கட்சிகள் என்னுடன் கூட்டணி வைப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் அது குறித்து வெளியிடுவோம். துரோகத்தின் நோபல் பரிசு பெறக்கூடிய தகுதி உடையவர் , அண்ணன் செங்கோட்டையன் அவர்களால் சொல்லப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, ஆண்டவன் அவர் செய்த 2017-ல் செய்த துரோகங்களுக்கு உறுதியாக அவருக்கு தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
2017 ஆம் ஆண்டு நம்பிக்கை எல்லா தீர்மானம் திமுக கொண்டு வரும் போது, எடப்பாடி பழனிச்சாமிக்கு 18 எம்எல்ஏக்கள் தேவையான நிலையில், 18 எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கி , அப்போது ஆட்சியை தக்க வைத்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, 18 எம்எல்ஏக்களை அப்போது ராஜினாமா செய்தது குறித்து ஏன்? மக்களிடம் கேட்கச் சொல்லவில்லை. வருகிற சட்டமன்ற பொது தேர்தலில் அவரது துரோகத்திற்கு இறுதி தீர்ப்பு எழுதப்படும். அண்ணா திமுக என்ற கட்சியை, இல்லாமல் செய்து இரட்டை இலை என்ற சின்னத்தை கையில் வைத்துள்ள அகம்பாவம் கொண்ட பண திமிரில் எடப்பாடி பழனிச்சாமி பேசி திரிகிறார். இந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு சரியான தீர்ப்பு வழங்குவார்கள். இரட்டை இலையை பலவீனப்படுத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணா திமுக என்ற கட்சியை எடப்பாடி திமுக என்று மாற்றி வைத்துள்ளார். ஒரு சில பேரை வைத்துக்கொண்டு, குடும்பக் கட்சியாக வைத்துள்ளார். பழனிச்சாமி எல்லோரையும் அரவணைத்து செல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி மகன், மைத்துனர் , சகலை தான் இன்று அந்த கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குடும்பக் கட்சியாக எடப்பாடி பழனிச்சாமி மாற்றிவிட்டார். அவரிடம் உள்ள தொண்டர்கள் தூங்குவது போல் நடித்தாலும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் விழித்து அவர்களும் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்” என்றார்.


