“ஈபிஎஸ்க்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகிவிட்டார்”- டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார். மீண்டும் NDA கூட்டணிக்கு வர வேண்டும் என என்னிடம் யாரும் பேசவில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த டிடிவி தினகரன், “செங்கோட்டையன் 1972 -லிருந்து கட்சியின் பொறுப்பில் இருக்கிறார். அதிமுகவின் சீனியர் அவர். செங்கோட்டையன் அண்ணன் மன வருத்தத்தில் எல்லோரும் ஒன்றிணை வேண்டும் என்ற கோரிக்கையை, நிராகரித்தது இல்லாமல் 50 ஆண்டு வரலாறு உள்ளவரை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு அவர் வேற கட்சியில் சேர்ந்திருக்கிறார். இத்தனை நாள் யோசித்து அந்த முடிவெடுத்து உள்ளார். பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார். துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுப்பதற்கு அவர் தயாராகி விட்டார் என்பதுதான் அவரது நடவடிக்கையில் தெரிய வருகிறது. தலைவர்கள் மீதான படத்தை வைத்திருப்பது நினைவிடத்திற்கு செல்வது உண்மையான மனநிலையை காட்டுகிறது.
மழைக்காலத்தில் சென்னையில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும் போது நீர் தேங்கி பள்ளமான இடங்களில் தேங்குகிறது. திமுக கட்சிக்கு ஆதரவாக இதை சொல்லவில்லை. அவர்கள் சரியாகத்தான் நடவடிக்கை எடுத்து எவ்வளவு விரைவாக நீரை வெளியேற்ற முடியுமோ அந்த அளவுக்கு பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அம்மா காலத்தில் இருந்து சரி செய்யப்பட்டு வருகிறது இவர்களும் சரி செய்து பணிகளை முடிந்த அளவு சரியாகத்தான் செய்கிறார்கள். நட்பு ரீதியாக பாஜகவில் இருந்து பேசுகிறார்கள், மீண்டும் NDA கூட்டணிக்கு வர வேண்டும் என என்னிடம் யாரும் பேசவில்லை” என்றார்.


