திமுக அரசு மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் வருமானத்தை மட்டுமே பார்ப்பதா?

 
ttv dhinakaran

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் டாஸ்மாக் கடைகள் திறந்திருப்பது குறித்து தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

tasmac

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 28,561 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது.  இந்த சூழலில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்கி வருகிறது.  இதனால் மதுபிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக மதுக்கடைகளின் முன்பு கூடி வருவதால் தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். 

TTV DHINAKARAN

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டிலேயே கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. இவ்வளவுக்கு பிறகும் எத்தனையோ பேர் தொடர்ந்து வலியுறுத்தியதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தி.மு.க. அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறது. மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் வருமானத்தை மட்டுமே பார்ப்பதா? ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி கொஞ்சமாவது இருக்கிறதா? " என்று பதிவிட்டுள்ளார்.