முதலமைச்சர் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு - தினகரன் விமர்சனம்!!

 
TTV STALIN

பொங்கல் பரிசுத்தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 

தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல்  பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இது  தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.  பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின் போது துறையால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் விளக்கினார்.  மேலும் தரக் கட்டுப்பாடு குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. 

stalin

விரிவான ஆய்வுக்கு பின்னர் பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்களை காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,  தரமற்ற பொருட்களை வழங்கி நிறுவனங்கள் மீது கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் . பொதுமக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும்,  அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.

TTV DHINAKARAN

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொங்கல் பரிசுத்தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம். தரமற்ற பொருட்கள் மக்களுக்கு போய் சேர்ந்த பிறகு இவர் நடவடிக்கை எடுப்பதால் என்ன பயன் ஏற்படப்போகிறது?  பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டெண்டரிலேயே முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வெளியான போது அதனைத் தடுத்து நிறுத்திட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தோம். அப்போதெல்லாம் விட்டுவிட்டு தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகம் முடிந்த பிறகு ஆலோசனை, நடவடிக்கை என்பதெல்லாம் மக்களை ஏமாற்ற செய்யும் வேலைதானே?! " என்று குறிப்பிட்டுள்ளார்.