'ஆறாக ஓடும் பணமழை' - காவல்துறை வேடிக்கை பார்ப்பதாக தினகரன் குற்றச்சாட்டு!!

 
ttv dhinakaran

பரப்புரை ஓய்ந்த நிலையில் நேற்று மாலையிலிருந்து பணமழை ஆறாக ஓடுவதாக தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  நாளை நடைபெறுகிறது. இதனால் தேர்தலை நடத்த  மாநில தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை   21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.  இதற்கான  வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 7 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

vote

அத்துடன் தமிழகத்தின் பிரதான கட்சிகள்  என்று சொல்லப்படும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. திமுக  கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிகள் , விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அதேபோல் அதிமுக தமிழ்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியமைக்க, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக , மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை தனித்து களம் காண்கின்றன. 

ttv

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் ஓய்ந்தவுடன் நேற்று மாலையிலிருந்து தமிழகம் முழுவதும் பணமழை ஆறாக ஓடுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில், ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் தி.மு.க மற்றும் பழனிசாமி கம்பெனிகள் பணத்தை வாரி இறைப்பதை மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது."என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.