"லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கியவருக்கு ஒரு மாதத்திற்குள்ளாகவே பதவி உயர்வு" : ஸ்டாலினை சாடும் தினகரன்

 
TTV Dhinakaran

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ஷோபனா என்பவர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தில் சேர் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.  இவர் பாலிடெக்னிக் வளாகத்திலேயே தங்கி பணியாற்றி வந்த நிலையில், வேலூர் ,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர் ,தர்மபுரி ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் தொடர்பான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தெரிகிறது.

நிதி ஒதுக்கீடு டெண்டர் விடுவது ஆகியவற்றில் ஷோபனா முறைகேடு செய்த நிலையில் , இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  இது தொடர்பாக ஓசூரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.  இதில் 2.27 கோடி ரூபாய் ரொக்கம் , தங்க நகைகள் , வெள்ளிப் பொருட்கள்,  பினாமி சொத்துகள் என அனைத்தும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால்  கைப்பற்றப்பட்டு அவர் கைதானார். 

TTV DHINAKARAN

இந்த சூழலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஷோபனா பணியிடமாற்றம் செய்யப்பட்டதுடன்,  பதவி உயர்வும் வழங்கப்பட்டது.  அவர் திருச்சி மண்டல பொதுப்பணித்துறையில் கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். இது மற்ற அரசு அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.2.27 கோடி பணம் மற்றும் நகைகளுடன் சிக்கி, கைது செய்யப்பட்ட பொதுப்பணித் துறை பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. தி.மு.க ஆட்சியில் லஞ்ச, ஊழல் எந்த அளவிற்கு புரையோடியிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கியவருக்கு ஒரு மாதத்திற்குள்ளாகவே பதவி உயர்வு கொடுத்து புதிய உலக சாதனை(?!) புரிந்திருக்கிறது விடியல் அரசு. தி.மு.க.வின் வழக்கப்படி ஊழலில் அவர்கள் செய்யப் போகும் இத்தகைய சாதனைகள் இனி ஒவ்வொன்றாக வெளிவரலாம்" என்று பதிவிட்டுள்ளார்.