மாற்றுத் திறனாளிகள் கைது...மனசாட்சியின்றி செயல்படும் திமுக அரசு : தினகரன் சாடல்!!

 
ttv dhinakaran

உதவித்தொகையை உயர்த்திகேட்டு போராட்டம் நடத்த சென்னை வந்த மாற்றுத்திறனாளிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு டிடிவி  தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TTV STALIN

தமிழக அரசு வழங்கும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து போராட்டம் நடத்துவதை தடுப்பதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தேர்தல் அறிக்கையில் ரூ.1,000 ஆக இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், இதுவரை உயர்த்தப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைப்பட்டது. இதன் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 


இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், உதவித்தொகையை உயர்த்திகேட்டு போராடுவதற்காகச் சென்னை வந்த மாற்றுத் திறனாளிகளை பல இடங்களில் தடுத்து நிறுத்தி, கைது செய்வதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க.அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுளின் குழந்தைகளான மாற்றுத் திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நினைக்காமல் மனசாட்சியின்றி காவல் துறையை வைத்து அவர்களை அலைக்கழிப்பது சரியானதா? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.