“புலி பதுங்குவது பாய்வதற்குதான்; ஆகையால் என்னை யாரும் குறைத்து எடைபோட வேண்டாம்”- டிடிவி தினகரன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் வலு பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமையும், தமிழகத்தில் உள்ள ஆட்சியை விரட்ட அனைத்து கட்சிகளும் இணைய வாய்ப்பிருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சோளிங்கர் பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசு பல்வேறு விதமான அறிக்கைகளை வெளியிட்டு முழுமையாக செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலை தூக்கி உள்ளது. மாணவர்கள், விவசாயிகள் என அனைவரையும் தமிழக அரசு வஞ்சித்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆனது வலுப்பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து கட்சியும் ஒன்று திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பதவியில் இல்லை என்றாலும் தமிழகத்திற்காக போராடும்.
திருமாவளவன் தற்போது எல்லாம் முன்னுக்குப் பின் முரண்பாட தகவல்களை தெரிவித்து வருகிறார். மேலும் விஜய் தனது தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுகளை வழங்கினாலும் தொண்டர்களும் அதனை பின்பற்ற வேண்டும். அதிமுக தொண்டர்கள் ஒரு சுற்றறிக்கை விட்டால் போதும் அதை எவ்வாறு பின்பற்றுகிறார்கள் என்பது தமிழகத்துக்கே தெரியும் அது போன்று கட்சி தொண்டர்களை விஜய் கட்டுப்படுத்த வேண்டும். புலி பதுங்குவது பாய்வதற்குதான். ஆகையால் என்னை யாரும் குறைத்து எடைபோட வேண்டாம். ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவரவே மோடியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்” என்றார்.


