எண்ணூர் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு- பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு

 
அமோனியா வாயு கசிவு

எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

Image

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கு மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாயுக்கசிவால் பெரியகுப்பம் மீனவ கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் வெளியேறினர்.

இதற்கிடையில், வாயு கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசும் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கை ஜனவரி 2ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி, தீர்ப்பாய பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.