நாயால் நேர்ந்த சோகம்- நின்றுகொண்டிருந்த லாரி மீது ஆட்டோ மோதி விபத்து; ஒருவர் பலி
சென்னை காசிமேட்டில் ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை சிந்தாதிரி பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக இன்று அதிகாலை எண்ணூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் சிறுமி உட்பட்ட 6 பெண்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது காசிமேடு சூரியநாராயணன் சாலை அருகே ஷேர் ஆட்டோ சென்ற போது தீடீரென நாய் குறுக்கே வந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத ஆட்டோ ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்ததில் ஆட்டோ சாலையில் நின்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி தலை குப்புற கவிழ்ந்து விழுந்தது.
இதில் ஷேர் ஆட்டோ ஒட்டுனர் செல்வகுமார், வசந்தி,சிவகாமி, ராதிகா, சுகந்தி, கவிதா மற்றும் சிறுமி பாரதி ஆகிய 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்தனர். பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்த 7 பேரையும் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த எண்ணூர் முகத்துவார குப்பம் பகுதியை சேர்ந்த 34 வயது ராதிகா என்ற பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மீன் வாங்க சென்ற பெண் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


