“கல்வியில் தரம் இல்லையா? வந்து மாணவர்களிடம் கேள்வியை கேட்டுவிட்டு அப்பறம் சொல்லுங்க”- ஆளுநருக்கு அன்பில் மகேஸ் அழைப்பு
தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் வைவா-வின் போது ஆளுநர் வந்து மாணவர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள 80 லட்சம் மதிப்பிலான சிறுவர் அறிவியல் பூங்காவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். பொது நூலக இயக்ககம் சார்பில் 40 நபர்களுக்கு “டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது (நல் நூலகர் விருது)”, 25 நபர்களுக்கு “நூலக ஆர்வலர் விருது (வாசகர் வட்டம்)” ஆகிய விருதுகளை வழங்கி, உறுப்பினர், புரவலர் மற்றும் நன்கொடை அதிகமாக சேர்க்கப்பட்ட 12 நூலகங்களுக்கு கேடையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இரண்டாவது தளத்தில் சாம்சங் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர் ஒப்பந்தம் கையெழுத்தானது. டிஜி அறிவு என்கின்ற ஏயை தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களை சார்ந்த 3000 மாணவர்கள் பயனடையும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் விதமாக உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு 24ஆம் தேதி கூட்டம் நடைபெற உள்ளது. வரும் கல்வி ஆண்டுகளில் மாநில கொள்கையின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரும் முயற்சி செய்து வருகிறோம். தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்பு தரம் குறைந்ததாக உள்ளது என ஆளுநர் விமர்சனம் செய்திருக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் தமிழகம் எந்தெந்த துறைகளில் முதன்மையானதாக இருக்கிறதோ அவற்றையெல்லாம் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் வைவா- வின் போது ஆளுநர் வந்து மாணவர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும். ஆராய்ச்சி மாணவர்கள் சொல்லுகின்ற பதிலிலிருந்து நமது கல்வியின் தரம் என்ன என்பதை ஆளுநர் தெரிந்து கொள்ள முடியும். பொதுவாக ஆராய்ச்சி படிப்புகளில் தரம் இல்லை என ஆளுநர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்க தவறு உள்ளது என்பதை சுட்டி காட்டினால் அவற்றை திருத்திக் கொள்ள தயாராக உள்ளோம். ராமேஸ்வரம் அருகே மாணவி கொலையானது பள்ளி வளாகத்திற்கு வெளியே நடந்துள்ளது. ஆனால் அது குறித்து விசாரிக்கப்படும். பள்ளி வளாகத்திற்குள் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். என்ன காரணத்திற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்தார்.


