“மாணவர்களுக்கு மதிப்பெண்களை காட்டிலும், ஒழுக்கம் தான் அவசியம்”- அன்பில் மகேஷ்
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கின்ற இயக்கமாக திராவிட மாடல் அரசு உள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

கற்றல் அடைவு திறன் அதிகரிக்க வேண்டி பள்ளித்தலைமை ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க நேற்று மாலை கடலூர் வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அமைச்சர், “கடலூர் மாவட்டம் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 2-வது இடம் பிடித்துள்ளது. அதேபோல் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்விலும் கடலூர் மாவட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதை தக்க வைத்துக் கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேற வேண்டும். அடுத்து நடக்கும் தேர்வில் முதல் 5 இடத்திற்குள் வர வேண்டும். கடலூர் மாவட்ட கலெக்டரும், மாணவர்கள் கல்வியில் முன்னேற நல்லதொரு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். மதிப்பெண் குறைந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர்களும் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். இதுபோன்று ஆசிரியர்களை சந்திக்கும்போது அது ஊக்கத்தை தரும் நிகழ்வாக அமைகிறது. நான் 21-வது மாவட்டமாக கடலூர் மாவட்டத்தை தற்போது ஆய்வு செய்கிறேன். அதனால் ஆசிரியர்கள், பொதுத்தேர்வில் நல்ல தேர்ச்சியை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண்களை காட்டிலும், ஒழுக்கம் தான் அவசியம். அதனால் தான் மகிழ் முற்றம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் மகிழ் முற்றம் திட்டத்தின் கீழ் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவர் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர். இதன்மூலம் மாணவர்களிடம் அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்படும். இதன் மூலம் மாணவர்களை ஒழுக்கத்தின் பாதைக்கு செல்ல முயற்சி செய்து வருகிறோம்.

ஆசிரியர்களிடம் பாடம் நடத்தும்போது நாட்டு நடப்பு குறித்தும், ஒழுக்கம் குறித்தும் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடையில் கற்றல் என்பது ஒவ்வொரு வருடமும் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை மன்ற செயல்பாடுகள் மூலம் தேர்வு செய்து ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை பகுதிகளுக்கு அழைத்து சென்று ஒரு வாரம் தங்க வைத்து தலைமை பண்பு குறித்து பாடம் நடத்தி வருகிறோம். கடலூர் மாவட்ட கலெக்டர் அறிமுகப்படுத்திய கோடையில் கற்றல் திட்டம் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதனை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
இதையடுத்து அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. அரசு பட்டை நாமம் சாற்றுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்கையில், அரசாங்கத்தை இயக்கக்கூடிய இதயமாகவும், மூளையாகவும் அரசு ஊழியர்கள் உள்ளனர். அதனால் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கின்ற இயக்கமாக திராவிட மாடல் அரசு உள்ளது. அதை போகப்போக அவரே புரிந்து கொள்வார் என்றார்.


