தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு? - அன்புமணி கண்டனம்

 
anbumani ramadoss

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  தமிழ்நாட்டில் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால், அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  10 மாதங்களில் மீண்டும் ஒரு மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும். மின்சாரக் கட்டண உயர் வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சொல்லிமாளாது. மின்சாரக் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன.  அதே போல், விசைத்தறி உரிமையாளர்களும் மின் கட்டண உயர்வின் தாக்கங்களை தாங்க முடியாமல் தொழிலை விட்டு வெளி யேறிவிட்டனர். சிறு வணிகர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பெரும்பகுதி மின் கட்டணம் செலுத்துவதற்கே செலவாகி விடுகிறது.

eb

இத்தகைய சூழலில் மின்சாரக் கட்டணம் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டால், வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் 90 சதவீத மக்களின் வருமானம் ஆண்டுக்கு 2 சதவீதம் கூட உயருவதில்லை. அப்படிப்பட்ட மக்களால் 4.70 சதவீத மின்கட்டண உயர்வை சமாளிக்க முடியாது. தமிழ்நாட்டின் வரலாற்றில் 10 மாதங்களில் இரண்டாவது முறையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது இதுவரை நிகழ்ந்ததில்லை. எனவே, மின்சாரக் கட்டணத்தை ஜூலை மாதம் முதல் உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.